Price: ₹449.00
(as of Feb 24, 2025 07:58:36 UTC – Details)
நாவலாசிரியரின் முன்னுரை :
ஏற்கனவே நான் எழுதி வெளிவந்த அறிவியல் சிறுகதைகளான ‘ விஞ்ஞானியின் மாமனார்’ ( தினமணி கதிர்- நவம்பர் 2013), ’எக்ஸ் ஆக்ஸிஸ் 1990’ ( கல்கி -ஆகஸ்டு 2021) இரண்டையும், நான் மீள் வாசிப்பு செய்த போது, இம்மாதிரியான தளத்தில் ஒரு முழு நாவல் எழுத வேண்டும் என்ற ஒரு ஆசை வந்தது.
விஞ்ஞானியின் மாமனாரில் இப்படி ஒரு இடம் வரும்.
குமரேசனின் வாகனம் அங்கு இறங்கியவுடன், அங்கு இருந்த பெண்களைப் பார்த்து ’நீங்க எந்த நூற்றாண்டுல இருக்கிறீங்க.. கி.பி யா, கி.முவா.’ என்று கேட்டான்.
இந்த நாவல் கி.மு மற்றும் கி.பி பயணத்தைப் பற்றித் தான்.
அறிவியலோடு வரலாற்றையும் சொல்ல முடியுமா என்று யோசித்தேன். வரலாறு எல்லோராலும் படிக்கப்பட வேண்டும், அதுவும் இளைய தலைமுறையினராலும் படிக்கப்பட வேண்டும் என்றால் அதில் புனைவைச் சேர்க்க வேண்டும் என்று நினைத்த நான், எனது அந்த முயற்சிக்கு ஐன்ஸ்டீனையும் துணைக்கு அழைத்த போது உருவானது தான் இந்த நாவல்.
இந்த நாவலில் நிறைய வரலாறும் சிறிது அறிவியலும் உண்டு.
முனைவர் பி. பாலசுப்பிரமணியன், உதவிப் பேராசிரியர், அவர்களின் அணிந்துரை:
புனைவுக்கு நெருக்கமான உண்மையின் மீதான பயணம்…
எழுத்தாளர் தாரமங்கலம் வளவன் அவர்களின் இயற்பெயர் திருமாவளவன். இவரது தந்தையார் தாரை வடிவேலு அவர்கள் சிறந்த தமிழாசிரியர் மட்டுமல்ல கவிஞர். அதனால் வளவன் அவர்கள் சிறுவயதிலிருந்தே தமிழின் மீது தீராக்காதல் கொண்டவராக இருந்திருக்கிறார். தொடர்ந்து பொறியியல் கல்வி பயின்று ஒன்றிய அரசுப் பணியில் சேர்ந்து அலுவல் காரணமாக இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் பணியாற்றியவர். ஏற்கனவே, அப்பாவின் வழி வந்த தமிழறிவும் இலக்கியம், வரலாறு, அறிவியல் உடனான இவரது ஆழ்ந்த வாசிப்பும் சமூகத்தின் மீதான நுணுக்கமான பார்வையும் மக்களைக் கூர்ந்து நோக்கும் அனுபவமும் இணைந்து இவரை எழுத்தாளராக்கியிருப்பது வியந்து பாராட்டத் தகுந்ததாகும். அதன் விளைவாக ஐயனார் கோவில் குதிரை வீரன், தோற்றப்பிழை ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் தாதர் எக்ஸ்பிரஸ், கடிகார கோபுரம், அம்னி என்ற மூன்று புதினங்களையும் எழுதி காவ்யா பதிப்பகத்தின் வழி வெளியிட்டிருக்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.
அண்மையில் வெளிவரவிருக்கும் இவரது “ஐன்ஸ்டீனுடன் பயணித்தபோது..“ என்ற நான்காவது நாவலை வாசித்தபோது பெரும் வியப்பில் ஆழ்ந்தேன். நாவல் எழுதப்படும் கருவின் அடிப்படையில் பல வகைமைகளாகப் பிரித்தறிகிறோம். ஆனால், இந்த நாவலை இலக்கியமாகப் பார்ப்பதா? வரலாற்று நாவலாகப் புரிந்து கொள்வதா? அறிவியல் புனைவாக எடுத்துக் கொள்வதா? என்பதில் நமக்கே ஐயம் எழுகிறது. புனைவென்பது உண்மைக்கு நெருக்கமானது எனுமளவிற்கு இலக்கியம், வரலாறு, அறிவியல் சார்ந்த தரவுகள் மட்டுமல்லாமல் நாம் இதுவரை அறியாத புதிய செய்திகளையும் கொண்டு வந்து நாவலில் இணைத்திருக்கிறார். ஒரு நாவல் எழுத அவர் மெனக்கெட்டிருக்கிற உழைப்பை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
கேரளாவிற்கு அணையைப் பார்வையிட வரும் கணேசன் இரவில் தனியாகப் படகில் பயணிக்கிற போது நீர்ச்சுழற்சியில் படகு கவிழ்ந்து மயக்கமடைகிறார். பேராசிரியர் பரமேஸ்வரனை அவருக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் பயணிக்க வேண்டும் என்ற அவரது ஆழ்மன விருப்பம் மயக்கத்தில் உலவுகிறது. அந்த மயக்கத்திலிருந்து வேறொரு கனவுலகிற்குத் தள்ளப்படும் கணேசன் சித்தரின் ஆணைப்படி அவரது பேராசிரியர் பரமேஸ்வரனை வரவழைத்துப் புனைவின் வழி புத்தர் தொடங்கி சத்ரபதி சிவாஜியின் மராட்டியப் பேரரசு ஆட்சிப் பரவல் வரை வரலாற்றின் நெடுவழியை நம்முன் அச்சு அசலாக எழுத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். இந்த வரலாறுகள் வாசிக்கப்படுகிறபோது அவை நம்முன் திரைக்காட்சியாக விரிகின்றன. எளிதாக மனக்கண்முன் பதிந்துவிடுகின்றன. நாவலை வாசித்து முடித்தப் பிறகும் காட்சிகள் ஓடிக்கொண்டேயிருப்பதை ஒரு சில நாட்களாக உணர்ந்தேன். நாவலாசிரியர் இந்த வரலாற்றுச் செய்திகளைப் பதிவு செய்து அதற்கு நியாயம் கற்பிக்கவில்லை. அதிலுள்ள நிறைகளைப் பாராட்டியும் குறைகளைச் சுட்டிக்காட்டியும் ஓர் எழுத்தாளராக உழைக்கும் மக்கள் பக்கம் இருந்து வரலாற்றை அணுகியும் இருக்கிறார் என்பதை ஓர் அறமாகப் பார்க்கிறேன்.
மேற்குத் தொடர்ச்சிமலை முதல் மராட்டியப் பேரரசு உருவாக்கம் வரை அனைத்தும் நாவலில் உரையாடல் வழியாகவே காட்சிப்படுத்தப்படுகின்றன. வரலாற்றுச் செய்திகளின் இடையிடையே சமகால வரலாற்றையும் நாவலசிரியர் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ASIN : B0DQGMF41Z
Language : Tamil
File size : 522 KB
Simultaneous device usage : Unlimited
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 196 pages