Price: ₹149.00
(as of Jan 05, 2025 19:22:52 UTC – Details)
அழகிய இளம் இரவுப் பொழுதில்… நிலவு தேவதை… அவசர அவசரமாய்க் குளித்து, குழல் உலர்த்தி… பரபரப்பாய் வேலைக்குச் செல்லும் பெண்ணாய்… வானத்தை வலம் வரத் தொடங்கினாள். அப்போது நட்சத்திரங்கள் கண்சிமிட்டி… காலேஜ் இளைஞனாய்க் கலாட்டா செய்ய… நிலவுப் பெண் வெட்கத்துடன் மேகங்களில் மறைந்து மறைந்து ஓடினாள்.
பகலெல்லாம் சூரியனின் உக்கிரத்தால் வாடியிருந்த செடி, கொடி, மரங்களெல்லாம்… சுகந்தமான தென்றலின் தழுவலில் மயங்கி, சிலிர்த்து, சிங்காரமாய்த் தலையாட்டின.
பள்ளி முடிந்து… படிப்பு, பாட்டு, பரதம், ஹிந்தி, கம்ப்யூட்டர் பயிற்சியென்று காலில் சக்கரம் கட்டாத குறையாய்… பறந்து பறந்து, அலைந்து, திரிந்த குழந்தைகள்… வீட்டுக்குள் புகுந்து… தாயின் மடியில் தஞ்சம் புகுந்து… தன் களைப்புகளை எல்லாம் விரட்டிக் கொண்டிருந்தனர்.
அர்ச்சனா கடிகாரத்தில் மணி பார்த்தாள். இரவு 8.00 மணி.
அவள் மனம் கலங்கிய குட்டையாய் இருந்தது. வீட்டிற்கும், வெளியுமாய்த் தவிப்புடன் நடந்து கொண்டிருந்தாள்.
அர்ச்சனாவைக் காக்க வைத்த… கலங்க வைத்த… கவலை ரேகைகளை முகமெல்லாம் படிய வைத்த… இளம்புயல் கௌசல்யா… வீதியில் வேகமாய் நடந்து வந்து… வீட்டிற்குள் புகுந்தாள்.
அர்ச்சனாவிற்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தாலும்… செந்தணலாய்த் தகித்த கண்களால் கோபத்தை வெளிப்படுத்தி… கௌசல்யாவை வாசலிலேயே பிடித்துக் கொண்டாள்.
“ஏய் கௌஷி… ஏன் இவ்வளவு லேட்? இவ்வளவு நேரமா கல்லூரி விடலை? உனக்குக் கொஞ்சமாச்சும் அறிவிருக்கா…? பயந்துட்டேன்! இத்தனை நேரமும் என் நெஞ்சில் நெருஞ்சியை வைத்துத் தேய்த்துவிட்டாயே! கழுதை… உன் அப்பா வர நேரம்! வந்ததும் உன்னைக் காணலேன்னு தவிச்சிடுவார். அப்புறமா… என்னிடம் சண்டைக்கு வந்துடுவார். குடும்பத்துல குழப்பம் பண்ணவே இருக்கேடி!” வேகமாய்ச் சத்தம் போட்டாள்.
“நான் என்ன சின்னக் குழந்தையாம்மா…? வழி தெரியாமல் காணாமல் போக! வீணா ஏன் கவலைப்படறீங்க?” கௌசல்யா அர்ச்சனாவிற்குப் பதிலடி கொடுத்தாள்.
“சின்னக் குழந்தைன்னா கூட கவலைப்படமாட்டேன்! நீயோ வயசுப்பெண்! அழகாய் மலர்ந்து மணம் வீசுகிறாய்! சிட்டியில் கொலை, கொள்ளை, கற்பழிப்புன்னு ஏகப்பட்டது மலிஞ்சி நடக்குது! முன்னே போல பெண் பிள்ளைங்க ரோட்ல நடந்துபோக முடியல! பசங்களோட கிண்டலும், கேலியும் கேட்க சகிக்கல! வீட்டுல காரும், டிரைவரும் இருக்க… உனக்கென்ன தலையெழுத்தாடி… பஸ்ல போய் அல்லாடறே! எது சொன்னாலும் கேட்காமல் இது என்ன அடம்? ம்? கார்ல போகாமல் ஏன்டி இப்படி இம்சிக்கிறே?”
“போம்மா… கார் சுத்த போர்ம்மா!”
“இருக்கும்… இருக்கும்டி! சொல்லமாட்டே பின்ன? காரும், வசதியும் இல்லாதப்ப… எத்தனை அடமும், ஆர்ப்பாட்டமும் செய்திருக்கிறாய்? எனக்கில்ல தெரியும்… உன் சின்ன வயதுத் தொந்தரவுகளை!”
“பசிக்குதும்மா! வாசலிலேயே நிறுத்திக் கேள்வி மேல் கேள்வி கேட்கணுமா?” கௌசல்யா சிணுங்க…
“ஏய்… நாளையில இருந்து நேரத்தோட வந்துருடி!”
“ட்ரை பண்றேம்மா!”
“தப்பு தண்டா ஏதும் பண்ணலீயே?” அர்ச்சனா கவலையாய்க் கேட்க…
“போம்மா… போய் முதல்ல டிபன் எடுத்து வை. சாப்பிட்டுட்டே உன் கேள்விகளுக்கெல்லாம் தெம்பாய்ப் பதில் சொல்றேன்!”
“லேட்டா வந்துட்டு… இதில் அதிகாரம் வேறா…?” இட்லி வைத்துச் சாம்பாரை ஊற்றினாள்.
“கௌஷிம்மா… ஜாக்கிரதைடா! அப்பாவோட புகழை… பாராட்டுக்களைக் கண்டு… அதை எப்படியாவது கெடுக்கணும்ன்னு சில விஷமிகளின்… எதிரிகளின் தூண்டுதலால்… சில நாலாம்தரப் பத்திரிகைகளும், மீடியாக்களும்… எப்போ எப்போன்னு அலையறாங்க! கொஞ்சம் பார்த்து நடந்துக்கம்மா! ப்ளீஸ்…” என்று கெஞ்ச…
“உன் புருஷனோட கௌரவத்துக்குப் பங்கம் வராப் போல நடந்துக்கமாட்டேன். நீ சின்னப் பிள்ளைக்குப் புத்தி சொல்றாப்போல எதுவும் சொல்ல வேண்டாம். நான் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்! வளர்ந்துட்டேன்! எனக்கு எது நல்லது எது கெட்டதுன்னு தெரியும்! எதுனா வேலையிருந்தா போய்ப் பாரும்மா. அதை விடுத்து சதா தொண தொணக்காதீங்க!” முகம் சுழித்துச் சொல்ல…
“ஏய் கௌசல்யா… உன் புருஷன்… உன் புருஷன்னு சொல்றீயே… அவர் உனக்கு அப்பா இல்லையா…?”
“உனக்கு அவர் புருஷனில்லையா?” மல்லுக்கு நின்று, “சொன்னால் என்னம்மா தப்பு?” என்று கௌசல்யா கேட்க…
அர்ச்சனா முகம் வாடிச் சென்றாள்.