Price: ₹149.00
(as of May 08, 2025 11:24:48 UTC – Details)
“அத்தை காபி…” என்றபடி தன்முன் டம்ளரை நீட்டிய சியாமளாவைப் பார்த்தாள் சிவகாமி. “அவ எங்கே? கூப்பிடு” என்று கேட்டுவிட்டு காபியை குடிக்க ஆரம்பித்தாள்.
“அவ… இன்னும்… எழுந்து வரலை அத்தை…” சியாமளாவின் குரலில் பயம். அவளுக்கு எதுவும் பதில் சொல்லாமல் நிமிர்ந்து சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள் சிவகாமி. மணி எட்டாகியிருந்தது.
“அத்தை காலையில் பொங்கலும் சட்னியும் செய்திட்டேன். மதியம் என்ன செய்யட்டும்?” சியாமளா கேட்டாள்.
காலி டம்ளரை அவளிடம் நீட்டியபடி, “தோட்டத்தில மணத்தக்காளி கீரை மானாவாரியா கிடக்கு. அதை பருப்பு போட்டுக் கடைஞ்சி, அப்பளம் பொரிச்சிடு. நேத்து பறிச்ச வாழைக்காயை பொரியல் பண்ணி வை” என்றாள். அதைக் கேட்டு சியாமளா தடுமாறினாள்.
“ஆனந்திக்கு கீரையே பிடிக்கறதில்லை அத்தை. வீட்டுல கீரை செய்யற அன்னிக்கெல்லாம் அவ வெறும் மோர் ஊத்தி சாப்பிடறா. அதனால கீரை கூட்டு பண்ணாம, காய் போட்டு சாம்பார் வைச்சிடட்டுமா?” என்று முணுமுணுத்தாள்.
அவளை சிவகாமி நிமிர்ந்து பார்த்தாள். “இதை அப்பவே ஏன் சொல்லலை? வீட்டுல என்ன சமையல் செய்யறோமோ அதைத்தான் எல்லோரும் சாப்பிடணும். அதை விட்டுட்டு இப்படி ஒருத்தருக்கு அது பிடிக்கும்… இன்னொருத்தருக்கு இது பிடிக்காதுன்னு ஒரே வீட்டுல நாலு வகை சமையல் செய்யக் கிளம்பினா வீடு விளங்கிடும்.”
சிவகாமியின் குரலில் கோபத்தை புரிந்து கொண்ட சியாமளா நடுங்கியபடி, “சொல்லக் கூடாதுன்னு நினைக்கலை… எதுக்கு பெரிசு பண்ணனும்னு நினைச்சேன். என்னை மன்னிச்சிடுங்க அத்தை…” என்றாள்.
“அன்னிக்கே என்கிட்டே சொல்லாம நீ மறைச்சிட்டது அவளுக்குத் தெரிஞ்சதும் தான் என்ன தப்பு செய்தாலும் நீ காப்பாத்திடுவேன்னு ஒரு தப்பான நம்பிக்கை அவ மனசில வந்திட்டுது. அதனாலதான் ஒன்பது மணியாகியும் இன்னும் தூங்கறா. இதோ பாரு சியாமளா ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிஞ்சிக்க. வயசில பெரியவங்க மேல சின்னவங்களுக்கு பயமும் மரியாதையும் இருக்கணும. இல்லைன்னா எல்லாமே தலை கீழாத்தான் நடக்கும். இனிமேலாவது கவனமா இரு. நான் சொன்ன மாதிரியே கீரைக் கூட்டு வை. அவ என்ன பண்றாள்னு பார்க்கலாம்.”
“ஆகட்டும் அத்தை” என்று சொல்லிவிட்டு சியாமளா சமையலறைக்குள் ஓடி மறைந்தாள். அங்கே நந்தன் உட்கார்ந்திருந்தான். சியாமளாவைக் கண்டதும் உதட்டில் விரலை வைத்து எச்சரித்தான். பிறகு மெதுவாக, “அண்ணி… ரொம்ப பசியா இருக்கு. பொங்கல் என்னை, ‘வாடா வாடா’ன்னு கூப்பிட்டுது. அதனால் நானே எடுத்து சாப்பிட்டுட்டேன்” என்றான்.
“ஏன் தம்பி பொய் சொல்றீங்க? என்னிக்கு நீங்களா எடுத்துப் போட்டு சாப்பிட்டிருக்கீங்க? வாங்க… நான் வைக்கிறேன். மதிய சாப்பாடு ஹாட் கேசுல வைச்சிருக்கேன். எடுத்துட்டுப் போங்க.”
“ரொம்ப தேங்க்ஸ் அண்ணி. மதியம் என்ன வைச்சிருக்கீங்க” என்று சின்னப் பிள்ளை போல கேட்டவனைப் பார்த்து சிரித்தாள் சியாமளா, “உங்களுக்குப் பிடிச்ச சாம்பார் சாதம். நிறைய நெய் போட்டு, முறுமுறுன்னு உருளை சிப்ஸ். முட்டை ஆம்லேட்.”
“ஆகா… அண்ணி… நான் மட்டும் ஒரு ராஜாவா இருந்தா என் நாட்டுல பாதியை உங்களுக்கு எழுதி வைச்சிருப்பேனே… இப்ப என்ன பண்ணுவேன்?” நந்தன் புலம்பினான்.
ASIN : B0DLW1VSH3
Publisher : Geeye Publications (17 November 2024)
Language : Tamil
File size : 1.6 MB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 122 pages