Price: ₹400.00
(as of Feb 28, 2025 21:53:09 UTC – Details)
இத்தனை கூட்டத்தில் நம்மைத் தெரியப் போகிறதா என்று ஆசுவாசம் எழ, அவளுடைய பதற்றம் சற்று விலகியது.
ஆடைகளைப் பார்க்கும் ஆர்வத்தில் ஆளுக்கு ஒரு பக்கம் நகர்ந்திருக்க, “இங்க சர்க்கரை எல்லாம் விக்கிறது இல்லை” என்ற அழுத்தமான கம்பீரக்குரல் பூரணியைச் செயலிழக்க வைத்து சிலைப்போல் மாற்றியது.
இத்தனை நேரம் விலகியிருந்த பதற்றம் பல மடங்கு வேகமாய் திரும்பி வந்திருக்க, விரலின் நுனியைக் கூட அவளால் அசைக்க முடியாது போயிற்று!
“அதோட சர்க்கரை விலையும் ஐம்பது ரூபாய் இல்லை போலவே! நாற்பதுன்னு கேள்விப்பட்டேன்!” என்று மீண்டும் சீண்டல் குரலில் அவளின் பின்புறமிருந்து நீதிவாசன் வினவினான்.
தன் குரலைக் கேட்டும் திரும்பாமல் நின்றிருந்தவளை ஆராய்ச்சியாய் பார்த்தவன், “ஏன் வீட்டுல சொல்லாம வந்திருக்கியா?” என்று கடுமையான குரலில் கேட்டான்.
வேகமாகத் திரும்பியவள், “இல்லை இல்லை சொல்லிட்டுத் தான் வந்திருக்கேன்…” என்றாள் பதற்றத்துடன். மீண்டும் முகம் வியர்க்கத் தொடங்கி விட்டது. உள்ளங்கையும் வியர்த்திருக்க கைக்குட்டையைக் கூட நழுவ விட்டு விடுவோம் என்னும் பயம் எழுந்தது.
கைகளை இறுக மூடி, ஏசியின் குளுமையிலும் வியர்க்க நின்றவளை விசித்திரமாகப் பார்த்தவனுக்கு, “எதற்கிந்த பயம்?” என்று கேட்க வேண்டும் போல இருந்தது. ஆனாலும் எதுவும் பேசாமல் நிற்க, அவளே பேசினாள்.
“சாரி அன்னைக்கு நீங்க வந்ததை கவனிக்கலை” என்றாள் வெகுவாக தணிந்த குரலில். இவள் கத்திப் பேசுவதைக் கேட்டே பழக்கப் பட்டிருந்ததால், அவனுக்கு இந்த குரல் வெகு வித்தியாசமாய் தெரிந்தது.
‘அதற்குத்தான் பயமா?’ என்று எண்ணியதை வெளிப்படுத்திக் கொள்ளாமல், “சரி பர்சேஸ் பண்ணு. பில் போடும் போது கவுன்டர்ல என்கிட்ட பேச சொல்லு…” என்றுவிட்டு நகர எத்தனித்தவனை, “இல்லை…” என அவசரமாக மறுத்து நிறுத்தினாள்.
செல்ல இருந்தவன் மீண்டும் இவள் புறம் திரும்பி நிற்க, “இல்லை… பிரண்ட்ஸ் கூட வந்திருக்கேன். இப்ப எதுவும் டிஸ்கவுண்ட் வேணாம்” என்றவளை மெல்லிய கோபம் எழப் பார்த்தான் அவன்.
அவன் முகமாற்றம் புரியவும், “அது கேலி… அது… வந்து… ‘நீங்க பெரிய ஆளு, கடை ஓனர்’ன்னு எல்லாம் சொல்லி கேலி பேச ஆரம்பிச்சுடுவாங்க… அதான்… அதோட ஒருமுறை இப்படி சலுகை கிடைச்சா மறுபடியும் இதையே எதிர்பார்ப்பாங்க…” என்று தயக்கமாக உரைத்தவளிடம் மேற்கொண்டு வற்புறுத்தாமல், “ஹ்ம்ம் சரி… வரேன்” என்று சொல்லி விடை பெற்றான் அவன்.
அவனுக்கு கோபம் போயிருந்தது புரிந்தது. இப்பொழுது விலகிப் போகவும் மூச்சுக்காற்று கூட சீரானது போல உணர்ந்தாள். ஆனாலும் அவன், தன் பார்வையில் விழாத தூரம் சென்றிருக்கவும் ஏனோ மனம் சற்று ஏமாற்றம் அடைந்தது போல உணர்ந்தாள்! அதற்கான காரணம் புரிந்தும் புரியாத நிலை!
வழக்கம்போல, ‘அதெல்லாம் எதுவும் இல்லை!’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். இவனைப் பார்ப்பதை இனி தவிர்ப்பது உத்தமம் என்று அவளின் மனம் அவளுக்கு ஆருடம் சொன்னது.